ஆரணியில் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன், ரூ.40 ஆயிரம் திருட்டு


ஆரணியில் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன், ரூ.40 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 25 May 2019 4:00 AM IST (Updated: 25 May 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன், ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணி முள்ளிப்பட்டு ஊராட்சி அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 55). இவர் களம்பூரில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, மகன், மருமகளுடன் கடந்த 22-ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் ஜன்னல் மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் சென்று நகை, பணத்தை திருடிச் சென்று, மோப்பநாய் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை தூவி தப்பி சென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து குமரேசன் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, பாரதி, மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story