கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: சிகிச்சை பலனின்றி லாரி உரிமையாளர் சாவு


கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: சிகிச்சை பலனின்றி லாரி உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 25 May 2019 3:45 AM IST (Updated: 25 May 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு, 

சேத்துப்பட்டை அடுத்த இமாபுரம் என்ற தூளி கிராமத்தை சேர்ந்தவர் சீனு (வயது 32), லாரி டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (29). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள்கள் பிரதீபா (10), திவ்யதர்ஷினி (8), மகன் ரித்திக்ரோஷன்(5).

சீனு சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, ரூ.6 லட்சம் கடன் பெற்று லாரி ஒன்றை வாங்கினார். வாங்கிய கடனுக்கு சீனு சரிவர தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தி அடைந்த சீனு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து குளிர்பானத்தில் விஷம் கலந்து மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வழியிலேயே ரித்திக்ரோஷன் உயிரிழந்தான். தொடர்ந்து மருத்துவமனையில் சீனு மற்றும் அவரது மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனு மற்றும் அவரது மகள் பிரதீபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலை சீனு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதீபாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story