குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு: முறையாக பராமரிக்காத 9 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முறையாக பராமரிக்கப்படாத வாகனங்கள் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டன.
பூந்தமல்லி,
கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்டு இயங்கும் தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
அப்போது, சோதனைக்கு கொண்டுவரப்பட்ட 162 தனியார் பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
அதில், வாகனங்களில் தீயணைப்பு கருவி, அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள் ஆகியவை சரியாக முறையில் இருக்கிறதா? தொடர்ந்து பராமரிக்கப்பட்டு இருக்கிறதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் திருப்தியில்லாத தகுதியற்ற 9 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஆய்வு நடத்திய பின்பு, ஆர்.டி.ஓ. பார்வேந்தன் கூறுகையில்:–
தகுதியில்லாதவை என்று திருப்பி அனுப்பப்பட்ட பள்ளி வாகனங்கள் சரி செய்யப்பட்டு உரிய அனுமதி பெற்ற பிறகே இயக்கப்பட வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவகத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிய அனுமதி பெற்ற பின்பே இயக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு இருந்தார்.