முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா முடிவு? பரபரப்பு தகவல்கள்
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலியாக முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் இதுபற்றி விவாதிக்க மந்திரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடர வேண்டும் என்று மந்திரிகள் அனைவரும் கூறினர். இதையடுத்து பேசிய குமாரசாமி, தான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து, அந்த பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தயார் என்றும், காங்கிரசில் யார் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டாலும், ஆதரவு வழங்க நாங்கள் தயார் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள கர்நாடக தலைவர்கள் இதுபற்றி ராகுல் காந்தியுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.