மராட்டியத்தில் நோட்டாவுக்கு 4¾ லட்சம் ஓட்டுகள் : பால்கரில் அதிகம்
மராட்டியத்தில் நோட்டாவுக்கு 4¾ லட்சம் ஓட்டுகள் விழுந்து உள்ளன. பால்கரில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து உள்ளன.
மும்பை,
தேர்தலின் போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கு (none of the above) வாக்களிக்கின்றனர். சமீப காலமாக நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அதிகமாகி வருகிறது. நோட்டாவுக்கு சிறிய கட்சிகள், சுயேச்சைகளை விட அதிக வாக்குகள் கிடைக்கிறது.
மராட்டியத்தில் நடந்து முடிந்த 48 நாடாளுமன்ற தொகுதியில், நோட்டாவுக்கு 4 லட்சத்து 88 ஆயிரத்து 766 வாக்குகள் கிடைத்து உள்ளன. அதாவது மராட்டியத்தில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவுக்கு 0.90 சதவீதம் ஓட்டு கிடைத்து உள்ளன.
அதிகபட்சமாக பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் 29 ஆயிரத்து 479 ஓட்டு நோட்டாவுக்கு கிடைத்து உள்ளன. நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள கட்சிரோலி - சிமூரில் 24 ஆயிரத்து 599 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்து உள்ளன. நந்துர்பரில் 21 ஆயித்து 925 ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்து உள்ளன.
மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் 82 ஆயிரத்து 225 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்து உள்ளன. இதில் அதிகபட்சமாக வடமேற்கு மும்பையில் 18 ஆயிரத்து 225 ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்து உள்ளன. தென்மும்பையில் 15 ஆயிரத்து 115, தென்மத்திய மும்பையில் 13 ஆயிரத்து 834, வடகிழக்கு மும்பையில் 12 ஆயிரத்து 466, வட மும்பையில் 11 ஆயிரத்து 966, வட மத்திய மும்பையில் 10 ஆயிரத்து 669 ஓட்டுகளும் நோட்டாவுக்கு விழுந்து உள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால் பல தொகுதிகளில் தபால் ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து உள்ளன. அதிகபட்சமாக கட்சிரோலியில் 181 தபால் ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்து உள்ளன.
பால்கரில் 16 தபால் ஓட்டும் நோட்டாவுக்கு கிடைத்து இருக்கிறது.
Related Tags :
Next Story