கும்பகோணத்தில், தனியார் மருத்துவமனையில் 90 பவுன் நகைகள் திருட்டு - நர்சு பிடிபட்டார், 65 பவுன் நகைகள் மீட்பு
கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் 90 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக அந்த மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்சை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து 65 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் சோழன் நகரில் வசித்து வருபவர் டாக்டர் செல்வராஜ்(வயது 69). இவர் கும்பகோணம் செட்டி மண்டபம் வட்டிப்பிள்ளையார் கோவில் தெருவில் சிறிய அளவில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனையில் கும்பகோணம் கோசி.மணி நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி கீதா(35) என்பவர், கடந்த 5 வருடங்களாக நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி தனது வீட்டில் இருந்த 90 பவுன் நகைகளை பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்து எடுத்து வந்து தனது மருத்துவமனையில் உள்ள மேஜை டிராயரில் வைத்து இருந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் கனடா சென்ற செல்வராஜ், கடந்த 22-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அன்று வழக்கம்போல் அவர் தனது மருத்துவமனைக்கு வந்து மேஜை டிராயரில் வைத்து விட்டுச்சென்ற நகைகள் பத்திரமாக உள்ளனவா? என்று பார்த்தார். அப்போது மேஜை டிராயர் திறந்த நிலையில் இருந்ததும், அதில் வைக்கப்பட்டிருந்த 90 பவுன் நகைகளும் திருட்டு போயிருந்ததும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்சு கீதாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து செல்வராஜ், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கீதாவை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில், செல்வராஜ் மருத்துவமனையில் வைத்து இருந்த நகைகளை தான் திருடியதை கீதா ஒத்துக்கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் மறைத்து வைத்து இருந்த 65 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீதம் உள்ள நகைகள் எங்கே வைக்கப்பட்டுள்ளது? இந்த துணிகர திருட்டில் கீதா மட்டும்தான் சம்மந்தப்பட்டுள்ளாரா? அல்லது அவருடன் வேறு யாராவது கூட்டு சேர்ந்து திருடினார்களா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story