மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கிணற்றுக்குள் இருந்து கற்களை வீசிய வாலிபர் திருப்பத்தூர் அருகே பரபரப்பு


மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கிணற்றுக்குள் இருந்து கற்களை வீசிய வாலிபர் திருப்பத்தூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 26 May 2019 4:15 AM IST (Updated: 25 May 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கிணற்றுக்குள் இருந்து கற்களை வீசிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45), விவசாயி. இவருக்கு சொந்தமான 55 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கிணற்றுக்குள் இருந்து திடீரென சத்தம் கேட்டது. இதுபற்றி அறிந்த தண்டபாணி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சென்று, கிணற்றுக்குள் பார்த்த போது உள்ளே மர்ம நபர் ஒருவர் இருந்தார். அப்போது அவர் மேலே இருந்தவர்களை நோக்கி இந்தி மொழியில் ஆக்ரோ‌ஷமாக சத்தம் போட்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிலைய அதிகாரி எத்துராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் கிணற்றுக்குள் இருந்த கற்களை எடுத்து தீயணைப்பு படையினர் மீது வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள், அவரை கிணற்றில் இருந்து மீட்காமல் மேலே ஏறிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கிணற்றுக்குள் இருந்த மர்ம நபரிடம், தீயணைப்பு வீரர்கள் இந்தியில் பேசினர். அதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டனர். அப்போது அவரது உடலில் ஆங்காங்கே லேசான காயம் இருந்தது.

பின்னர் மர்ம நபரிடம் விசாரணை நடத்தியதில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த திலீப்ஓராமின் (வயது 20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து திலீப் ஓராமின் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மேலும் அவரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்துள்ளார். மர்ம கும்பலுடன் வந்து கிணற்றின் உள்ளே இருந்த மின்மோட்டாரை திருட வந்தபோது, இவர் மட்டும் உள்ளே சிக்கி கொண்டாரா? என்றும், பக்கத்து கிராமமான குனிச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story