வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 6–ந் தேதி கடைசிநாள் என துணைவேந்தர் குமார் கூறினார்.
வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 6–ந் தேதி கடைசிநாள் என துணைவேந்தர் குமார்
நாமக்கல்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வருகிற 6–ந் தேதி கடைசி நாளாகும். இந்த படிப்புக்கு இதுவரை 32 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்–லைன் மூலம் பெறப்பட்டு உள்ளன.
இதற்கான தரவரிசை பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும்.
பிளஸ்–2 கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களும், வேளாண்மை பட்டப்படிப்புகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்பதால், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பல்கலைக்கழக வளாகத்தில் 40 இருக்கைகளுடன் புதிதாக வேளாண்மை பொறியியல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. மேலும் இப்பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. வேளாண்மை படிப்புகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
இதுதவிர 14 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கி வருவதோடு, 1 லட்சம் விவசாயிகள் பயன் பெற்று உள்ளனர்.
கடந்த ஆண்டு திருப்பூரில் பல்கலைக்கழகம் சார்பில், வேளாண்மை அறிவியல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நீலகிரியில் வேளாண்மை அறிவியல் நிலையம் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.