திருச்செந்தூர் சரகத்தில், வருகிற 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது


திருச்செந்தூர் சரகத்தில், வருகிற 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 6:40 PM GMT)

திருச்செந்தூர் சரகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் வகையில், வருகிற 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வந்தால், அவர்களுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமை தாங்கினார். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் முன்னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் துண்டுபிரசுரமும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் போலீசார் இணைந்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்னும் ஒரு வார காலம் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே ஹெல்மெட் இல்லாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர்- நெல்லை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் விபத்தில் ஹெல்மெட் இல்லாததால் உயிரிழந்தனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். ஹெல்மெட் அணிந்தால் உயிரிழப்பை தடுக்கலாம். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு 20 சதவீதம் விபத்துகள் குறைக்கப்பட்டன. 2018-19-ம் ஆண்டில் மேலும் 25 சதவீதம் விபத்துகளை குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். திருச்செந்தூர் சரகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி பலன் அளித்தால் தூத்துக்குடி டவுன், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் அந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் ஜேசுராஜ், துணைத்தலைவர் முத்துகுமார், பொருளார் முகேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன் (திருச்செந்தூர் தாலுகா), கிங்ஸ்லி தேவ் ஆனந்த் (ஆத்தூர்), பத்திரகாளி (ஆறுமுகநேரி), சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜன், கார்த்திக், அன்னஜோதி, போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story