பெரம்பலூரில் காய்கறி விலை உயர்வு தக்காளி, கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனை


பெரம்பலூரில் காய்கறி விலை உயர்வு தக்காளி, கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 26 May 2019 4:15 AM IST (Updated: 26 May 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, கேரட் கிலோ தலா ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதேபோல பெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. ஒரு சில காய்கறிகள் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைவாக இருப்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக காய்கறிகள் வாங்குவதற்கு இந்த மார்க்கெட்டிற்கு வருகை தருவது வழக்கம். மேலும் மார்க்கெட்டில் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய வேளைகளில் காய்கறிகள் வாங்குவோரின் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை காலம் என்பதாலும் காய்கறிகள் விளைச்சல் குறைவாக இருப்பதாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட, இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

விலை விவரம்

பெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

நாட்டு தக்காளி கிலோ ரூ.60-க்கும், அதில் அடுத்த ரகம் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.20-க்கும், கோழி அவரைக்காய், மாங்காய் தலா கிலோ ரூ.30-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், முள்ளங்கி, தட்டக்காய், சுண்டைக்காய், கோவக்காய், முட்டைக்கோஸ், சவ்சவ் ஆகிய காய்கறிகள் கிலோ தலா ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் முருங்கைகாய், புடலங்காய், பீர்க்கங்காய், பீட்ரூட் ஆகியவை தலா ரூ.60-க்கும், பூசணிக்காய் ரூ.15-க்கும், சுரைக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய், குடமிளகாய், பாகற்காய், பீன்ஸ் ஆகியவை கிலோ தலா ரூ.80-க்கும், கேரட் ரூ.60-க்கும் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு கிலோ தலா ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.25-க்கும், தரத்தின் படி சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ. 50-க்கும், பெல்லாரி ரூ.20-க்கும், நூல்கோல் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக இருக்காது. இதனால் அதன் விலைகள் வழக்கத்தை விட சற்று அதிகமாக உள்ளது. அடுத்த வாரங்களில் இதைவிட விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனக் கூறினார். 

Next Story