காரிமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் மின்விளக்குகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
காரிமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் மின்விளக்குகளை சிலர் அடித்து நொறுக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
காரிமங்கலம்,
காரிமங்கலம் அருகே சாவடியூர் மற்றும் சொட்டாண்டஅள்ளி ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளது. இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா காலங்களில் தார்ச்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் நுழைவுவாயிலில் மின்விளக்கு கட்டுவது வழக்கம். இதுதொடர்பாக 2 ஊரை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) சாவடியூரில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் செல்லும் தார்ச்சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் விழாக்குழுவினர் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த சொட்டாண்டஅள்ளியை சேர்ந்தவர்களும், சாவடியூரை சேர்ந்த கிறிஸ்தவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிலர் அங்கு கட்டப்பட்டு இருந்த மின்விளக்குகளை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு தர்மபுரி ஆயுதபடை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மோதல் குறித்து நேற்று காலை காரிமங்கலம் தாசில்தார் கேசவமூர்த்தி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், காரிமங்கலம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் இரு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ‘திருவிழா நாட்களில் இரு மதத்தை சேர்ந்தவர்களும் தனிநபர் பட்டா நிலத்தில் பேனர் வைக்கவும், மின்விளக்கு அமைக்கவும் கூடாது.
அவரவர் திருவிழாவின்போது காவல் துறையிடம் அனுமதி பெற்று தங்களின் பேனர்கள், விளம்பர தட்டிகள், மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க வேண்டும். இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த அமைதி பேச்சு வார்த்தையில் இரு கிராமத்தை சேர்ந்தவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டது.
Related Tags :
Next Story