கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது


கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 7:36 PM GMT)

கரூர் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.

கரூர்,

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. மூர்த்தி சிறி தெனினும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்றாற் போல் இந்த கோவிலின் அமைப்பு சிறிய அளவில் இருந்த போதிலும் அம்மனின் சக்தி மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எல்லையே இல்லாமல் உள்ளது. இந்த ஆண்டு இக்கோவில் திருவிழாவானது கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.

பின்னர் 17-ந்தேதி நடந்த பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் புனிதநீர் குடங்களை எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு புனிதநீர், பாலாபிஷேகம் செய்து வழிபட்டதை காண முடிகிறது.

தேரோட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 29-ந்தேதி வரை மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருக்கின்றனர். இதையொட்டி கரூர் ஜவகர்பஜார் வீதியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பூஜை பொருட்கள் விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது.

இதற்கிடையே திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெற இருக்கிறது. தேரில் வீற்றிருக்கும் மாரியம்மனை தரிசிக்க ஆயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் கரூர் நகர வீதிகளில் வலம் வருவார்கள். இதனையொட்டி போக்குவரத்திற்காக ஆங்காங்கே இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேரோட்டத்தில் மக்கள் கூட்டத்தை பயன் படுத்தி நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஆங்காங்கே கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்பம் விடுவதற்கான ஏற்பாடுகள்

தொடர்ந்து வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) கோவிலிலிருந்து கம்பத்தை எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று, பசுபதிபாளையம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கரூர் மட்டும் அல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் வருகை தந்து இந்த விழாவில் பங்கேற்பார்கள். இதையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் சேத மடைந்த தரைப்பாலத்தை சீர் செய்ததோடு, அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கம்பம் விடுவதற்கும் அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோரின் கேளிக்கைக்காக அங்கு ராட்டினங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கு தனி அறை அமைக்கப்பட்டு, அதன் அருகே செயற்கை நீருற்று வசதியும் செய்யப்பட்டுள்ளது. கம்பம் விடுதல் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியை மேற்கொள்வது, போக்குவரத்தினை மாற்றம் செய்து சீரான போக்குவரத்திற்கு வழிவகுப்பது உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story