துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு எதிராக சுவரொட்டி : துமகூருவில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேவேகவுடா தோல்வி அடைந்த நிலையில், துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு எதிராக துமகூருவில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துமகூரு,
நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா போட்டியிட்டார்.
துமகூரு தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுத்ததால் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேவேகவுடாவுக்கு எதிராக முன்னாள் எம்.பி. முத்தஹனுமே கவுடா சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவரை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தினர்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனால் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தேேவகவுடாவுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதன்மூலம் அதிருப்தியில் உள்ள கட்சியினரை சமரசம் செய்துவிடலாம் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தேவேகவுடா 13 ஆயிரத்து 339 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் பசவராஜிடம் தோல்வியை தழுவினார். இது கூட்டணி கட்சி தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், துமகூருவை சேர்ந்தவரும், துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வருக்கு எதிராக துமகூரு தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், பரமேஸ்வர் விலகு, காங்கிரசை காப்பாற்று என்றும், அதன் கீழ் பகுதியில் இப்படிக்கு துமகூரு மாவட்ட காங்கிரசார் என அச்சிடப்பட்டுள்ளது.
தேவேகவுடா தோல்வி அடைந்த விரக்தியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியினரே இந்த சுவரொட்டிகளை ஒட்டினார்களா? அல்லது காங்கிரஸ் கட்சியினர் தான் ஒட்டினரா என்பது தெரியவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.