தேவேகவுடாவுடன் குமாரசாமி திடீர் சந்திப்பு : முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதா? வேண்டாமா? என ஆலோசனை


தேவேகவுடாவுடன் குமாரசாமி திடீர் சந்திப்பு : முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதா? வேண்டாமா? என ஆலோசனை
x
தினத்தந்தி 26 May 2019 6:00 AM IST (Updated: 26 May 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தேவேகவுடாவை முதல்–மந்திரி குமாரசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது குமாரசாமி முதல்–மந்திரி பதவியில் நீடிப்பதா? வேண்டாமா? என்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதல்–மந்திரி பதவியை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க குமாரசாமி முன் வந்திருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் முதல்–மந்திரி பதவியில் தொடர்ந்து இருக்கும்படி குமாரசாமியிடம் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆபரே‌ஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான தேவேகவுடாவின் வீட்டுக்கு முதல்–மந்திரி குமாரசாமி நேற்று காலையில் சென்றார். பின்னர் அவர், கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்வது குறித்து தேவேகவுடாவுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக முதல்–மந்திரி பதவியில் நீடிப்பதா?, அல்லது காங்கிரசுக்கு விட்டு கொடுப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அதே நேரத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முதல்–மந்திரி பதவியில் நீடிக்கும்படி தன்னிடம் கூறியது பற்றியும் தேவேகவுடாவுடன் குமாரசாமி ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருபுறம் கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல காங்கிரஸ் தலைவாகள் முழு ஆதரவு அளித்தாலும், ஆட்சியை கவிழ்க்கவும், எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் முயற்சிப்பதை தடுக்கவும், கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேவேகவுடாவும், குமாரசாமியும் ஆலோசனை நடத்தினார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பதால் முதல்–மந்திரி பதவியில் நீடிக்கும்படியும், ராகுல்காந்தியுடன் ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட முடிவு எடுக்கலாம் என்றும் குமாரசாமியிடம் தேவேகவுடா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் தேவேகவுடா வீட்டில் இருந்து குமாரசாமி புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையில், பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முதல்–மந்திரி குமாரசாமியின் வீட்டுக்கு நேற்று காலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் சென்றார். அங்கு முதல்–மந்திரி குமாரசாமியை சந்தித்து அரை மணிநேரத்திற்கும் மேலாக விஸ்வநாத் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டணி ஆட்சியை தொடர சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பதால் முதல்–மந்திரி பதவியில் நீடிக்கும்படி குமாரசாமியிடம் விஸ்வநாத் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் பா.ஜனதாவின் ஆபரே‌ஷன் தாமரையை முறியடிக்கவும், ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குமாரசாமியுடன் விஸ்வநாத் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து 2 பேரும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story