கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு; அதிவேகமாக ஓட்டினால் லைசென்சு ரத்து


கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு; அதிவேகமாக ஓட்டினால் லைசென்சு ரத்து
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 10:58 PM GMT)

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு புதுச்சேரியில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதிவேகமாக வாகனங்களை ஒட்டி னால் லைசென்சு ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மாணவ, மாணவிகளின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் கல்வி நிறுவன வாகனங்களை ஒழுங்குபடுத்த சுப்ரீம் கோர்ட்டு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களும், அரசு அமலாக்க அதிகாரிகளும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் அவ்வாகனங்களின் உறுதித்தன்மையினை அவ்வப்போது ஆய்வு செய்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் எந்திர அமைப்பின் வலுத்தன்மை, வாகன கட்டமைப்பின் உறுதித்தன்மை, டிரைவரின் செயல்திறன் மற்றும் அனுபவம், ஆகியவை ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகனங்களில் தகுந்த கதவு பூட்டு உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இதன்படி புதுவையில் நேற்று கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 300 வாகனங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து நகரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் துணை ஆணையர் சச்சிதானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் சீத்தாராமராஜூ மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து வாகனங்கள் வருகிற 1-ந்தேதி வரை ஆய்வு செய்யப்பட உள்ளது. சுமார் 1000 வாகனங்கள் அப்போது ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளில் போக்குவரத்து துறையை சேர்ந்த 10 வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதேபோல் வாகன ஆய்வினை மேற்கொள்ள காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. பள்ளிக்கூட வாகனங்களை 40 கி.மீ வேகத்துக்கு மேல் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதையும் மீறி வேகமாக சென்றால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு ஆணையர் சிவக்குமார் கூறினார்.

Next Story