ஒரு குடம் குடிநீருக்கு 2 மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகரிக்க கோரிக்கை


ஒரு குடம் குடிநீருக்கு 2 மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகரிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 May 2019 4:15 AM IST (Updated: 26 May 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே ஒரு குடம் குடிநீருக்காக, பொதுமக்கள் 2 மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர், 

வேலூர் எப்போதும் வெயிலுக்கு பெயர் பெற்றது. கோடை காலங்களில் தமிழ்நாட்டில் வேலூரில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.

பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தினமும் மழைவருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் வெயிலின் அளவுதான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் போதிய மழையும் இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 500 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் இருப்பதில்லை. இதனால் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அணைக்கட்டு ஒன்றியத்தில் சத்தியமங்கலம் ஊராட்சியில் உள்ளது கம்மார்பாளையம் கிராமம்.

ஈச்சங்காடு, இலவம்பாடி, மோட்டூர் என பல்வேறு கிராமங்கள் கம்மார்பாளையத்தின் அருகில் உள்ளன. கம்மார்பாளையம் கிராம மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வறட்சி காரணமாக 8 நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஊரின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். மேலும் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்தே குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வறட்சி மற்றும் மழையில்லாததன் காரணமாக இந்த ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வறண்டுவிட்டது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காத்திருந்து குடிநீரை எடுத்துச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு குடம் குடிநீருக்காக அவர்கள் 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். பொதுமக்கள் குடங்களுடன் வந்து ஆழ்துளை கிணற்றின் அருகில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

ஒரு குடம் தண்ணீர் அடித்தால் பின்னர் 2 மணி நேரம் கழித்துதான் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வருகிறது. அதுவரை பொதுமக்கள் அங்கேயே காத்திருக்கிறார்கள். இதனால் பகல் நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரம் மட்டுமின்றி நள்ளிரவிலும் இங்கு குடிநீருக்காக காத்திருக்கிறார்கள்.

இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் குழாய் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதேபோன்றுதான் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.

வசதி படைத்தவர்கள் 1,000 லிட்டர் கொண்ட ஒரு டேங் தண்ணீரை ரூ.250 விலை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள். கூலி வேலை, விவசாய வேலைக்கு செல்பவர்கள் ஆழ்துளை கிணற்றில் காத்திருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். எனவே கம்மார்பாளையம் மற்றும் பக்கத்து கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story