வாணியம்பாடி அருகே விவசாயி அடித்துக்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்


வாணியம்பாடி அருகே விவசாயி அடித்துக்கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 27 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி, போலீஸ் அதிகாரிகள் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி, 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அரபாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 45), விவசாயி. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவரது குடும்பத்தினருக்கும், வீட்டின் அருகே உள்ள பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கும் கடந்த 13–ந் தேதி வீட்டின் எதிரே சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக குமரவேல், முனியம்மாள், கோவந்தி மற்றும் மருமகன் விக்னேஷ் ஆகியோரை பெருமாள் குடும்பத்தினர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் குமரவேல், கோவந்தி ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை குமரவேல் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அரபாண்டகுப்பம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து 500–க்கும் மேற்பட்டோர் தும்பேரி கூட்ரோடு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குமரவேல் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கோ‌ஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, சச்சிதானந்தம், தாசில்தார் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குமரவேலின் மனைவி முனியம்மாள் மற்றும் குடும்பத்தினர் திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையெனில் தீக்குளித்து சாகுவோம் என கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசார் இதுதொடர்பாக பெருமாள், சிவா ஆகிய 2 பேரை கைது செய்து இருப்பதாகவும், மேலும் 5 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story