கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிப்போன இலவம்பாடி கத்தரி செடிகள்
வறட்சியின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இலவம்பாடி கத்தரி செடிகள் தண்ணீரின்றி கருகி போனதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்ப்பது இலவம்பாடி கத்தரிக்காய். அணைக்கட்டு பகுதியில் உள்ள இலவம்பாடி பகுதியில் கத்தரிக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது. ருசி மிகுந்த இந்த கத்தரிக்காய் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, சென்னை உள்பட பக்கத்து மாவட்டங்களிலும் பெயர் பெற்றது.
மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்பவர்கள் கத்தரிக்காய் வாங்கும்போது இலவம்பாடி கத்தரிக்காய் என்று கேட்டு வாங்கும் அளவுக்கு இதன் பெயர் பிரபலமானது. அதேபோன்று மார்க்கெட்டுகளில் கத்தரிக்காய் விற்பவர்கள் இலவம்பாடி முள்கத்தரிக்காய் என்று கூவி கூவி விற்பார்கள். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற இலவம்பாடி கத்தரிக்காயை தற்போது மார்க்கெட்டுகளில் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலவம்பாடி மட்டுமின்றி அணைக்கட்டு, ஈச்சங்காடு, மோட்டூர், மூஞ்சூர்பட்டு, பின்னத்துறை, புலிமேடு, சிவநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வந்தது. ஆவணி மாதம் முதல் தை மாதம் வரை அதிகஅளவில் கத்தரிக்காய் விளையும். நாற்று நட்டதில் இருந்து 45 நாட்கள் கழித்து காய் காய்க்க தொடங்கும். தொடர்ந்து 1 வருடம் முதல் 1½ வருடம் வரை காய் பறித்து வந்தனர். தற்போது பயிருக்கு அடிக்கும் மருந்து, உரம் காரணமாக 10 மாதங்கள் மட்டுமே காய்காய்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டுவிட்டன. 600 அடிக்குமேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து சொட்டுநீர் பாசனங்கள் மூலம் பெரும்பாலான இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
வறட்சி காரணமாகவும், போதிய விலையில்லாததாலும் தற்போது கத்தரிக்காய் பயிரிடுவது குறைந்துவிட்டது. தற்போது தண்ணீரின்றி, விவசாயிகள் பயிரிட்ட கத்தரி செடிகள் அனைத்தும் கருகிப்போய் காட்சியளிக்கிறது. காய்கள் காய்த்த நிலையில் செடிகள் அனைத்தும் தீ வைத்து எரித்தது போன்று காட்சியளிக்கிறது. இதனால் இலவம்பாடி கத்தரிக்காய் தற்போது மார்க்கெட்டுகளுக்கு வருவதில்லை.
தங்கள் பகுதியில் அதிக அளவில் கத்தரிக்காய் விளைவித்து மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிய விவசாயிகள், தற்போது தங்களுக்கு தேவையான கத்தரிக்காயை மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கிச்செல்கிறார்கள். அது வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும் கத்தரிக்காய்கள், ஆனாலும் அதுவும் இலவம்பாடி கத்தரிக்காய் என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
விவசாயிகள் அதிக அளவில் கத்தரிக்காய் விளைவித்தாலும் அதற்கான நாற்றை அவர்கள் வளர்ப்பதில்லை. அதேபகுதியில் தயாளன் என்பவர் தனியாக பண்ணை வைத்துள்ளார். கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இதை நடத்தி வருகிறார். இங்கு கத்தரி நாற்றுகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யாறு பகுதியை சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்துதான் கத்தரி நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.
இதற்கு முன்பு பன்றிகளின் சாணத்தை கொண்டு கத்தரி செடிகளுக்கு புகைபோட்டு வந்ததாகவும், அதனால் நோய் தாக்காமல் 1½ வருடம் வரை காய்கள் காய்த்ததாகவும், தற்போது மருந்து, உரம் இடுவதன் மூலம் 10 மாதங்கள் மட்டுமே காய்கள் காய்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் கத்தரி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து வருணபகவானை வேண்டிய வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story