மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை போலீசார் தீவிர கண்காணிப்பு


மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 27 May 2019 4:45 AM IST (Updated: 26 May 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கிகளின் பயன்பாடு ஆங்காங்கே இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். இதேபோல் அரூர் அருகே பக்கத்து வீட்டு நாயை கள்ளத்துப்பாக்கியால் சுட்ட ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கூறியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கிகள் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அச்சடித்து வினியோகம் செய்ய உள்ளோம்.

கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து போலீஸ் நிலையத்திலோ, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திலேயோ அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்கலாம். நேரடியாக வந்து ஒப்படைக்க தயங்குபவர்கள் கிராம நிர்வாக அலுவலகம் உள்பட பொது இடங்களில் கள்ளத்துப்பாக்கிகளை போட்டுவிட்டு செல்கிறார்களா? என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story