பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி கடையில் தகராறு செய்த 10 பேர் கைது
பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி கடையில் தகராறில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்,
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் பேக்கரி மற்றும் காபி கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் (வயது 41). இவரது கடையில் 8 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் கிருஷ்ணகிரி கொடமாண்டம்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன்(30) கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
இவர் மற்ற பணியாளர்களிடம் இங்கு வேலை செய்ய வேண்டாம், சம்பளம் ஒழுங்காக தரமாட்டார்கள் என்று கூறி 5 பேரை வேலையை விட்டு செல்லும்படி நேற்று முன்தினம் கூறி உள்ளார். இதனால் வேலையை விட்டு 5 பேர் நின்று விட்டனர்.
இதை கேள்விப்பட்ட செந்தில்குமார், லட்சுமணனிடம் ஏன்? இவ்வாறு கூறி அவர்களை வேலையை விட்டு நின்று விட செய்தாய்? என்று கேட்டுள்ளார். மேலும் நீயும் வேலையை விட்டு நின்று கொள் என்று கூறி அவருக்கு, சம்பளம் ரூ.3 ஆயிரத்து 500-ஐ கொடுத்து அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில், லட்சுமணன் மற்றும் 9 பேர் செந்தில்குமாரின் பேக்கரி கடைக்கு வந்தனர். அங்கு அவர்கள், செந்தில்குமார் மற்றும் பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கைகளால் அடித்தும், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த லட்சுமணன், குமரேஷ்(24), திருப்பதி(30), சென்னப்பன்(36), ராமன் (21), சீனிவாசன் (29) மற்றும் ராசிபுரத்தை சேர்ந்த சுதாகர்(40), அன்பு(34), ரங்கநாதன்(38), சேலத்தை சேர்ந்த சக்திவேல்(30) ஆகிய 10 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் சம்பவம் குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், லட்சுமணன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story