கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 6:22 PM GMT)

கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஆலட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 28). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி தேவம்மா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மகன் பவன்கல்யாண் (வயது 21). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி பக்கமுள்ள சாமந்தமலையைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 30). கட்டிடதொழிலாளி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை அருகே உள்ள பள்ள சூளகரை சேர்ந்த புனிதா (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அன்பரசுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் புனிதாவிற்கு “அம்மை” போட்ட காரணத்தால் தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த தனது மனைவியை அழைத்து வருவதற்காக அன்பரசு சென்றார். அப்போது கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அன்பரசு வீட்டின் வெளியே மோட்டார்சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story