புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பாளையங்கோட்டை ஜெயில் வார்டன் பலி


புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பாளையங்கோட்டை ஜெயில் வார்டன் பலி
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-27T00:06:30+05:30)

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாளையங்கோட்டை ஜெயில் வார்டன் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் மந்திரம் என்ற மகராஜா (வயது 23). இவர் பாளையங்கோட்டை ஜெயிலில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மந்திரம் நேற்று மதியம் பணி முடிந்து, அவருடன் பணியாற்றி வரும் மற்றொரு வார்டனான மேலகூட்டுடன்காட்டை சேர்ந்த சேர்ந்தையன் மகன் முத்துராஜசேகர் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளை மந்திரம் ஓட்டினார். அவர்கள் புதுக்கோட்டையை அடுத்துள்ள தெய்வச்செயல்புரம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மந்திரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துராஜசேகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த முத்துராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான மந்திரம் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் ஜெயில் வார்டன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story