வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிள்ளையார் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 40) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ராமலிங்கம் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வருவாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமலிங்கத்தின் மனைவி மற்றும் மகன்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமலிங்கம், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பாலையா மனைவி லட்சுமி (55). இவருடைய மகன் கணேசன். கொத்தனாராக உள்ளார். லட்சுமி தனது மகன் கணேசன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக லட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் போதிய மருத்துவ சிகிச்சை பெற்ற போதும், அவருக்கு உடல் நலம் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story