மன்னார்குடி சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மன்னார்குடி சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-27T00:20:59+05:30)

மன்னார்குடியில் உள்ள சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி நகரின் பிரதான வடிகால் வாய்க்காலாக சட்ருட்டி வாய்க்கால் விளங்குகிறது. இந்த வாய்க்கால் வழியாக தான் மன்னார்குடி நகரின் 80 சதவீத வடிகால் நீர் செல்கிறது. வடசேரி சாலையில் தொடங்கி மதுக்கூர் சாலை, பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பஸ் நிலையம் பின்புறம், தாமரை குளம் மேல்கரை, வடகரை வழியாக சென்று பாமணி ஆற்றில் இந்த வாய்க்கால் சேருகிறது. தற்போது நகர பகுதியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்காலின் அகலம் குறைந்தது. மேலும் ஆகாயத்தாமரை, கோரை புற்கள் உள்ளிட்ட தேவையற்ற செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் வாய்க்காலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஒரு சில பகுதிகளில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டன. மழை காலங்களில் இந்த வாய்க்கால் மூலம்தான் மழைநீர் வடிந்து பாமணி ஆற்றில் சென்று சேரும். தற்போது இந்த வாய்க்காலில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும்.

இந்த வாய்க்காலில் பல இடங்களில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்றி, சட்ருட்டி வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story