விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த 2 வாலிபர்களால் பரபரப்பு


விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த 2 வாலிபர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த 2 வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்த காவலாளியை தாக்க முயன்றபோது 2 பேரும் பிடிபட்டனர்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 50). இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் தமிழ்செல்வன் பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த 2 வாலிபர்கள், அவசர சிகிச்சை பிரிவு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வன் அந்த வாலிபர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தமிழ்செல்வனை தாக்க முயன்றதோடு, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதைபார்த்த சக பணியாளர்கள் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரை சேர்ந்த வேல்முருகன்(35), முகுந்தன்(24) என்பதும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வரும் திருவாமாத்தூரை சேர்ந்த முத்தழகன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்வதற்காக கத்தியுடன் வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன், முகுந்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story