கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது


கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2019 3:45 AM IST (Updated: 27 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

கார்களில் கடத்த்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டி வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அங்குள்ள சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே போலீசார், ஜீப்பில் அந்த காரை துரத்திச்சென்று விக்கிரவாண்டி ஏரிக்கரை அருகே மடக்கினர்.
அதன் பின்னர் அந்த காரை சோதனை செய்ததில் 192 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தை சேர்ந்த அருள்மணி (வயது 30), ஜோதிமணி (26) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரிய வந் தது.இதையடுத்து அருள்மணி, ஜோதிமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மது விலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோல் மரக்காணம் அருகே அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை போலீஸ் ஏட்டு ராஜசெல்வம் தலைமையிலான போலீசார் நேற்று காலை 6 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் 467 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் காஞ்சீபுரம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (50) என்பதும், புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Next Story