அமைந்தகரையில் ரூ.10 லட்சம் கடன் தகராறில் பெண் காரில் கடத்தல் வீட்டில் அடைத்து சரமாரியாக தாக்கியவர்களுக்கு வலைவீச்சு


அமைந்தகரையில் ரூ.10 லட்சம் கடன் தகராறில் பெண் காரில் கடத்தல் வீட்டில் அடைத்து சரமாரியாக தாக்கியவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 May 2019 3:30 AM IST (Updated: 27 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அமைந்தகரையில் ரூ.10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை காரில் கடத்தி சரமாரியாக தாக்கியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி,

சென்னை கீழ்ப்பாக்கம், டைலர்ஸ் ரோடு, திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திலகவேணி (வயது 51). இவர் தற்போது குடியிருக்கும் வீட்டை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சகாயராணி என்பவரிடம் ரூ.50 லட்சத்திற்கு வாங்கினார்.

ரூ.35 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். பின்னர் மீதி பணம் ரூ.15 லட்சத்தை 2 வருடத்தில் தருவதாக கால அவகாசம் கேட்டுள்ளார். இதன்படி சிறுக, சிறுக ரூ.5 லட்சம் செலுத்தியதாகவும் மீதமுள்ள ரூ.10 லட்சம் பாக்கி இருக்கும் நிலையில் அதனை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சகாயராணியின் கணவர் தாஸ், திலகவேணியிடம் செல்போனில் பேசி உங்களிடம் நேரில் பேச வேண்டும் என்று அழைத்து உள்ளார். இதனை நம்பி திலகவேணி அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே வந்து நின்று கொண்டு இருந்தார்.

அங்கு காரில் 4 பேரை அழைத்து வந்த தாஸ், திலகவேணியை தாக்கி காரில் கடத்தி சென்றார். இதனை சற்றும் எதிர்பாராமல் பயந்து போன திலகவேணி சத்தம் போட்டார். உடனே காரில் இருந்த மர்மநபர்கள் திலகவேணியின் வாயை துணியால் கட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.10 லட்சத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் சாமர்த்தியமாக பேசிய திலகவேணி அங்கிருந்து ரத்தக்காயங்களுடன் தப்பித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

ஆனால் சம்பவம் நடந்த இடம் அமைந்தகரை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு வருவதால் புகாரை வாங்காமல் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்து விட்டதாக கூறப்படுகிறது. பயந்து போன திலகவேணி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் கடத்தல் காட்சிகள் ஏதாவது பதிவாகி உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திலகவேணியை காரில் கடத்திய தாஸ் மற்றும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் திலகவேணி உண்மையாகவே கடத்தப்பட்டாரா? அல்லது நடிக்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரூ.10 லட்சம் கடன் பாக்கிக்காக பெண்ணை காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story