கடலூரில் இருந்து பூம்புகாருக்கு அனுமதியின்றி விழிப்புணர்வு பேரணி; 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


கடலூரில் இருந்து பூம்புகாருக்கு அனுமதியின்றி விழிப்புணர்வு பேரணி; 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 May 2019 3:45 AM IST (Updated: 27 May 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் இருந்து பூம்புகாருக்கு அனுமதியின்றி பேரணியாக சென்ற 6 மோட்டார் சைக்கிள்களை கலெக்டரின் தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம், 

கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று 6 மோட்டார் சைக்கிள்களில் 11 பேர் ஹெல்மெட் அணிந்தபடி சென்று கொண்டிருந்தனர். இவர்களுக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சென்றது. சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகில் அவர்கள் சாலையை மறித்தபடி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கடலூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், சாலையை மறித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வண்டிகேட் அருகே வந்து கொண்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களையும் மறித்து, அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூரில் இருந்து பூம்புகாருக்கு பேரணியாக ஆம்புலன்ஸ் பாதுகாப்புடன் சென்றதும் தெரியவந்தது.

ஆனால் அவர்கள் பேரணியாக செல்வதற்கு போலீசாரிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதையடுத்து 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் அனுமதியின்றி பேரணி சென்றதாகவும், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதாகவும் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர்.

Next Story