பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
கோடை விடுமுறை காரணமாக பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள், குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த மாங்குரோவ் காடுகள் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை சதுப்பு நிலக்காடுகள், அலையாத்திக்காடுகள் என்றும் அழைக்கிறார்கள். இங்கு 1,100 கிளை வாய்க்கால்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பள்ளி மாணவ-மாணவிகள், குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக இருந்தது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் பயணிகள் ஏறி, பிச்சாவரத்தின் மொத்த அழகையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை ரசித்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். மேலும் தாங்கள் கொண்டுவந்த உணவுகளை அங்குள்ள குடில்களில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையம் களைகட்டியது.
Related Tags :
Next Story