பெண்ணாடத்தில் காதல் திருமணம் செய்த பெண், தீயில் கருகி சாவு


பெண்ணாடத்தில் காதல் திருமணம் செய்த பெண், தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 27 May 2019 3:30 AM IST (Updated: 27 May 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடத்தில் காதல் திருமணம் செய்த பெண், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 24). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சி பொன் மலையை சேர்ந்த ஜான்சிராணி என்கிற அஜித்பிரியா (21) என்பவரும் வேலைபார்த்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு, விஜயகுமாரும், ஜான்சிராணியும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பெண்ணாடத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். விஜயகுமார் அங்குள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஜான்சிராணி சம்பவத்தன்று வீட்டில் உள்ள ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றியதாக தெரிகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜான்சிராணி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஜான்சிராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜான்சிராணியின் தாய் ஆரோக்கியமேரி பெண்ணாடம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த ஜான்சிராணிக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் பிரசாந்த் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story