விவசாய நிலங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்ப்போம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


விவசாய நிலங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்ப்போம் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 27 May 2019 5:00 AM IST (Updated: 27 May 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்ப்போம் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

காங்கேயம்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் கொ.ம.தே.க. சார்பில் போட்டியிட்ட சின்ராஜ் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் சின்ராஜ் எம்.பி. மற்றும் கட்சியினர் வாகனங்களில் பேரணியாக வந்து காங்கேயம் அருகே உள்ள குங்காருபாளையத்தில் அமைந்துள்ள கோவை செழியன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இதில் பேரவை தலைவர் திருச்சி தேவராஜன், மாநில பொருளாளர் கே.கே.சி பாலு, மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில அவைத்தலைவர் சென்னியப்பன், திருப்பூர் மாவட்ட செயலாளர் சக்திவேல், குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இனி நாடாளுமன்றத்தில் கொ.ம.தே.க.வின் குரல் கோவை செழியனின் குரலாக ஒலிக்கும். தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற கொங்கு நாட்டின் நீர்பாசன திட்டங்கள், சாயக்கழிவு நீர் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, விவசாயிகளுக்கு உரிய லாபம் இருக்கின்ற தொழில்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து போராடி வருகிறோம். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என கூறினார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியினர் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க.வில் இருந்த வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது. இருக்கிற குழப்பங்கள் எல்லாம் அ.தி.மு.க.வில் தான். இனி வருகின்ற காலத்தில் தான் அதை பார்க்கவேண்டும். பிரிந்து சென்ற டி.டி.வி தினகரன் அதிகம் ஓட்டுகளை பெறுவார் என்றெல்லாம் பல பேர் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. யார் பணி ஆற்றுவார்கள் என்று தான் வாக்குகளை மக்கள் தந்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டதா? இல்லையா? என்பது இனி தான் தெரியும்

தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை என்ற மாயை உடைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்து மேற்கொள்ளப்படும் எந்த திட்டத்தையும் நாங்கள் எதிர்ப்போம். அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story