அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசார பயணம் மாநகருக்குள் போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு


அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசார பயணம் மாநகருக்குள் போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 May 2019 11:15 PM GMT (Updated: 26 May 2019 9:54 PM GMT)

அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டனர். மாநகருக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

அரசு பள்ளிகளை பாதுகாக்கவும், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வசதியை உத்தரவாதப்படுத்தவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நான்கு ஊர்களில் இருந்து சைக்கிள் பிரசார பயணம் கடந்த 25–ந் தேதி தொடங்கப்பட்டது.

கோவையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்த சைக்கிள் பிரசார பயணக்குழுவுக்கு மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் காவியா ஆகியோர் தலைமை ஏற்றனர். இந்த பயணக்குழுவினர் நேற்று காலை திருப்பூர் மாவட்டத்தில் தங்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.

பல்லடத்தில் தொடங்கி அருள்புரம், வீரபாண்டி பிரிவு வழியாக அவர்கள் திருப்பூர் மாநகருக்கு வந்தனர். பல்லடம் ரோடு வழியாக திருப்பூர் மாநகருக்குள் இந்த பயணக்குழுவினர் வருவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரபாண்டி பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நின்று போலிசாரிடம் அனுமதி கேட்டனர். போலீஸ் உதவி கமி‌ஷனர் நவீன்குமார், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி அனுமதிக்கு மறுத்து விட்டனர்.

இதையடுத்து வீரபாண்டி பிரிவில் இருந்து வித்யாலயம் வழியாக முருகம்பாளையம், பெரியாண்டிபாளையம், அணைப்பாளையம், அனுப்பர்பாளையம் வரை பிரசார பயணம் நடந்தது. இதில் 13 மாணவிகள் உள்பட 50 பேர் பங்கேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் சென்றனர். இந்த பயண குழுவினருக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் உன்னிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் உள்பட கட்சியினர் வரவேற்றனர். பல இடங்களில் குழுவினருக்கு மலர் தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதியம் இந்த குழுவினர் ஆத்துப்பாளையம் ரோடு, அங்கேரிபாளையம், பாண்டியன் நகர், வாலிபாளையம், மொரட்டுப்பாளையம் வழியாக ஊத்துக்குளி டவுன் பகுதிக்கு பயணம் மேற்கொண்டனர்.

முன்னதாக பல்லடத்திற்கு வந்த இந்திய மாணவர் சங்க சைக்கிள் பயண விழிப்புணர்வு குழுவிற்கு பல்லடம் என்.ஜி.ஆர்.ரோட்டில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நிருபன் சக்கரவர்த்தி விளக்கவுரையாற்றினார்.


Next Story