வடவள்ளி அருகே பட்டப்பகலில் ஜோதிடர் குத்திக்கொலை


வடவள்ளி அருகே பட்டப்பகலில் ஜோதிடர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 27 May 2019 5:30 AM IST (Updated: 27 May 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளி அருகே பட்டப்பகலில் ஜோதிடரை குத்திக்கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வடவள்ளி,

கோவை தடாகம் ரோடு குமாரசாமி காலனியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் சந்தோஷ் (வயது 26). மகள் சத்தியபவானி (24). இதில் சந்தோஷ் ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர் இந்திய குடியரசு கட்சியின் இளைஞர் அணி பொறுப்பிலும் இருந்து உள்ளார்.

இவர்களது தூரத்து உறவினர் விஜயகுமார். இவரும் குடியரசு கட்சி பிரமுகராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன், அவரது நண்பர்களும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் விஜயமாருக்கும், சந்தோசுக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்து உள்ளது.

விஜயகுமார், சந்தோசிடம் மீண்டும் கட்சியில் இணையும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார், சந்தோசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சந்தோஷ் தனது தாயார் பிரேமலதாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீரகேரளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் வீரகேரளத்தில் உள்ள நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் சந்தோசை பிடித்துக்கொண்டு கத்தியால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா தனது மகனை காப்பாற்றும்படி கத்தினார். கும்பல் குத்தியதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் மனோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தோசின் தூரத்து உறவினர் விஜயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஏரிமேடு ஆறுமுகம், குண்டு ரமேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. பட்டப்பகலில் நடுரோட்டில் ஜோதிடர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடியவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story