வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு வெளியேறியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் மீட்பு; உறவினர்கள் சேர்க்க மறுப்பதால் பரிதவிப்பு


வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு வெளியேறியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் மீட்பு; உறவினர்கள் சேர்க்க மறுப்பதால் பரிதவிப்பு
x
தினத்தந்தி 27 May 2019 5:00 AM IST (Updated: 27 May 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஒண்டிப்புதூரில் வீட்டில் சண்டைபோட்டுக்கொண்டு வெளியேறியவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் மீட்கப்பட்டார். உறவினர்கள் அவரை சேர்க்க மறுப்பதால் அவரது வீட்டு வாசலில் தவித்து வருகிறார்.

சிங்காநல்லூர்,

கோவை ஒண்டிப்புதூர் எஸ்.எம்.எஸ். லே-அவுட்டை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் சங்கமேஸ்வரன் (வயது 55). திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த குடும்ப சண்டையில் தனது தாய், தந்தையுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவர் கோபித்துக்கொண்டு போனதால் அவரை உறவினர்கள் யாரும் தேடவில்லை.

இந்தநிலையில் இவர் வீட்டை விட்டு சென்றதில் சாலை விபத்தில் சிக்கி 2 கால்களும் செயலிழந்த நிலையில், நடக்கமுடியாமல் நெல்லை மாவட்டம் தென்காசி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்தார்.

இதையடுத்து, அந்த ஊரை சேர்ந்த ‘பசியில்லா தென்காசி’ என்ற தொண்டு நிறுவனம் இவரை பிடித்து விசாரித்தது.

இதனைதொடர்ந்து அந்த தொண்டு நிறுவனம் அவரை மீட்டு கோவை அழைத்து வந்தது. பின்னர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஆத்மா அறக்கட்டளை உதவியுடன் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசாருடன் சங்கமேஸ்வரன் வீட்டில் ஒப்படைக்க சென்றனர். ஆனால் 15 ஆண்டுகள் கழித்து வந்த தனது மகனை ஆனந்த கண்ணீருடன் கிருஷ்ணசாமி வரவேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணசாமி மற்றும் அவரது உறவினர்கள், இவரை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டு, வீட்டிற்கு வந்த சங்கமேஸ்வரன் தனது வீட்டில் உறவினர்கள் சேர்க்க மறுப்பதால் வீட்டு வாசலில் பரிதவிப்புடன் இருப்பது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கண்கலங்க செய்தது.

Next Story