பசுமையாக காட்சி அளிக்கும் வனப்பகுதிகள் தொடர் மழையால் முதுமலை புலிகள் காப்பகம் மூட வாய்ப்பு இல்லை வனத்துறை விளக்கம்


பசுமையாக காட்சி அளிக்கும் வனப்பகுதிகள் தொடர் மழையால் முதுமலை புலிகள் காப்பகம் மூட வாய்ப்பு இல்லை வனத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 26 May 2019 11:15 PM GMT (Updated: 26 May 2019 10:10 PM GMT)

தொடர் மழையால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. இதனால் முதுமலை புலிகள் காப்பகம் நடப்பு ஆண்டில் மூட வாய்ப்பு இல்லை என வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கூடலூர்,

ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கூடலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவது வழக்கம். இக்காலக்கட்டங்களில் வனம் பசுமை இழந்து காணப்படும். மேலும் நீர்நிலைகள் வறண்டும் விடுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றன. கடந்த மார்ச் மாதம் கோடை மழை பெய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் பெய்ய வில்லை. இதனால் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஓவேலி பல்மாடி, ஆத்தூர், ஹெலன் குடிநீர் திட்ட தடுப்பணைகள் வறண்டது. இதனால் கூடலூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கோடை மழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து இருந்தனர்.

கடந்த 2 வாரங்களாக கூடலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காலநிலை காணப்படுகிறது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பக வனத்திலும் மழை பெய்து வருகிறது. வழக்கமாக கோடை வறட்சி அதிகமாக இருக்கும் காலக்கட்டங்களில் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவது வாடிக்கை. இந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

ஆனால் தற்போது கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கூடலூர், முதுமலை பகுதியில் உள்ள வனங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் புலிகள் காப்பக வனத்திலும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலையை வெகுவாக ரசித்து வருகின்றன. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் நடப்பு ஆண்டில் மூடப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து முதுமலை வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:–

நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் 100 ஏக்கர் பரப்பளவு காட்டுத்தீயால் கருகி விட்டது. மேலும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு வனவிலங்குகளும் உணவு தேடி வேறு இடங்களுக்கு சென்று விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

மேலும் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும். ஆனால் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் வனம் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடையாமல் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் நடப்பு ஆண்டில் முதுமலை புலிகள் காப்பகம் மூட வாய்ப்பு இல்லை.


Related Tags :
Next Story