கம்மாத்தி தடுப்பணை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்மாத்தி தடுப்பணை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 10:10 PM GMT)

கம்மாத்தி தடுப்பணை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என ஆண்டுக்கு 6 மாதங்கள் மழை பெய்கிறது. கூடலூர் நடுவட்டம், ஓவேலி, தேவாலா பகுதியில் உற்பத்தியாகி பல கிளை ஆறுகளாக பிரிந்து குண்டம்புழா, பாண்டியாறு வழியாக கேரளாவுக்கு ஆறு பாய்கிறது. மற்றொரு பிரிவு முதுமலை மாயார் வழியாக பவானிசாகர் அணைக்கும் தண்ணீர் செல்கிறது.

இதேபோல் பந்தலுர் தாலுகா பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளும், பல கிளை ஆறுகளும் ஓடுகின்றன. நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் அனைத்து ஆறுகளும் வறண்டு வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி கம்மாத்தி அணையும் வறண்டது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் வறண்டன. கூடலூர் பகுதியில் பாயக்கூடிய ஆற்று வாய்க்கால்களின் குறுக்கே தடுப்பணைகள் போதிய அளவு கட்டப்பட வில்லை.

இதனால் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடால் வனவிலங்குகளும் தவிக்கின்றன. இதேபோல் முதுமலை ஊராட்சியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல் விளைவிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் பருவமழை சரிவர பெய்யாத சமயத்தில் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இன்னும் 1 வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

ஆனால் கம்மாத்தி தடுப்பணையில் இருந்து பல பிரிவுகளாக செல்லும் வாய்க்கால்கள் புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. பலத்த மழை பெய்யும் போது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் சீராக செல்ல வழி இல்லாமல் வாய்க்கால்கள் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விவசாய நிலத்துக்குள் வெள்ளம் செல்ல வழி ஏற்படும். எனவே வாய்க்காலை அகலப்படுத்தி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story