வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு கடந்த 18.4.2019 அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 23.5.2019 அன்று நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரி பார்க்கக்கூடிய எந்திரங்கள் ஆகியவற்றை அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணிகளுக்காக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பரமக்குடி 302 வாக்குச்சாவடி, திருவாடானை 346 வாக்குச்சாவடி, ராமநாதபுரம் 336 வாக்குச்சாவடி, முதுகுளத்தூர் 383 வாக்குச்சாவடி, அறந்தாங்கி 276 வாக்குச்சாவடி, திருச்சுழி 273 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு 302 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் வாக்கு பதிவிற்காக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் மொத்தம் 4,162 வாக்கு செலுத்தும் எந்திரங்கள், 2,233 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,263 வாக்காளர் சரி பார்க்க கூடிய எந்திரங்கள்(கோளாறு காரணமாக மாற்றப்பட்ட எந்திரங்களையும் சேர்த்து) என முறையே பயன்படுத்தப்பட்டன.
தொடர்ந்து கடந்த 23.5.2019 அன்று வாக்கு எண்ணும் பணிகள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதுகுளத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் விருதுநகர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் மதியழகன், சுமன், ராமன், கயல்விழி, சுப்பையா, கார்த்திகைசெல்வி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.