விருதுநகரில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்; பொது மக்களுக்கு பாதிப்பு


விருதுநகரில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்; பொது மக்களுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:32 PM GMT (Updated: 26 May 2019 10:32 PM GMT)

விருதுநகர் நகராட்சி பகுதியில் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி பகுதிக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில் குடிநீர் ஆதாரங்களான தாமரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆணைகுட்டம் அணைப்பகுதி, ஒண்டிப்புலி கல்குவாரி ஆகியவற்றில் இருந்து தினசரி 30 லட்சம் முதல் 35 லட்சம் லிட்டர் குடிநீரே கிடைத்து வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை 10 நாட்களில் இருந்து 12 நாட்களாக அதிகரித்து உள்ளது.

நகர் மக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் குடிநீரைவிட கோடை காலமாக உள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில் குடிநீர் வினியோக நேரத்தையும் குறைத்துள்ளது. இதனால் நகர் மக்களுக்கு தேவைப்படும் குடிநீர் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகமும் முறையான நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதிக்கு ராஜிவ்காந்தி தேசிய குடிநீர் திட்டத்தின் கீழ் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நீர் ஆதார வறட்சி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யாதநிலை தொடர்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இந்த பகுதியில் உள்ள பாரதிநகர், மாத்தி நாயக்கன்பட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் பகுதியில் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்க்க நகராட்சி நிர்வாகத்துக்கு கூடுதலாக நிதிஉதவி செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் விரைவில் குடிநீர் வினியோக மேம்பாட்டு திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story