மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு : காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு : காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 26 May 2019 11:01 PM GMT (Updated: 26 May 2019 11:01 PM GMT)

மேலூர் அருகே கூத்தப்பன்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சீறிபாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது, கூத்தப்பன்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற நாகம்மாள் கோவில் திருவிழாவையொட்டி விழாக்குழுவினர் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கூத்தப்பன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு போட்டியை முன்னிட்டு கிராமத்தில் மைதானம் அமைக்கப்பட்டது. மேலும் மைதானத்தின் நடுவே கல் பதிக்கப்பட்டு வடகயிறு சுற்றப்பட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டை காண கூத்தப்பன்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விழாக்குழுவினர், கிராம பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.

முதலில் கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கியது. இதில் சுற்றுகள் அடிப்படையில் 15 காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் மைதானத்திற்குள் விட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டினர். அதனை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

பின்னர் மஞ்சுவிரட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

Next Story