கம்பத்தில் கஞ்சா விற்றவர் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்
கம்பத்தில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம்,
கம்பம் நாககன்னியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர்.
இதில் பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த அரசன் (வயது 39) என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது
இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி குறித்து போலீசார் கூறியதாவது:–
கஞ்சா வியாபாரியான அரசனிடம் இருந்த கைத்துப்பாக்கி சிறுவர்கள் விளையாடும் பொம்மை துப்பாக்கியாகும். இதற்கு லைசென்ஸ் தேவையில்லை. எனவே இதை வழக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் எதற்காக அவர் இந்த துப்பாக்கி வைத்திருந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.