ஏரியூர் அருகே யானை மிதித்து தொழிலாளி சாவு
ஏரியூர் அருகே வனப் பகுதிக்கு ஆடுகள் மேய்க்க சென்ற போது யானை மிதித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது50). தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், மணிவண்ணன் (14), மணிவாசகம் (10) என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் ஆடுகள் வளர்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாணிக்கம் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
அப்போது வனப்பகுதியில் குட்டியுடன் வந்த பெண் யானை ஒன்று திடீரென மாணிக்கத்தை விரட்டி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓடினார். இருப்பினும் யானை விடாமல் துரத்தி சென்று அவரை தூக்கி வீசி கால்களால் மிதித்தது. இதனால் அலறி துடித்த அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது யானை மிதித்ததில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் மாணிக்கத்தின் குடும்பத்தினர் மற்றும் ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணிக்கத்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இதையடுத்து போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யானை மிதித்து தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story