குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த சின்னதாளாப்பள்ளி, காந்தி சிலை, புதிய பாஞ்சாலியூர், ஒண்டியூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்து வருகிறோம். அத்துடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டோம். ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பள்ளிகள் அனைத்தும் விடுமுறை என்பதால், நாங்களும், எங்கள் குழந்தைகளும் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் கேட்டு பெற்று வருகிறோம். எனவே, எங்களுக்கு ஏரி ஓரம் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story