3 நாட்கள் நடைபெறுகிறது: ஏற்காடு கோடைவிழா 31-ந்தேதி தொடக்கம்
ஏற்காட்டில் கோடை விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
ஏற்காடு,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், பொட்டானிக்கல் கார்டன், கிளியூர் நீர்வீழ்ச்சி, அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்கள் உள்ளன. சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ஒன்று, படகு இல்லம். இங்கு குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படும். இந்த விழா பள்ளி திறப்பதற்கு முன்பே கோடை விடுமுறையில் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு கோடை விழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த விழா வருகிற 31-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிற்கு இணங்க ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் ஏற்காட்டில் 44-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மலர்களை கொண்டு மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும், காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியன அமைக்கப்படவுள்ளது.
கோடை விழாவில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க முகாம் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் படகு போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. கோடைவிழா மலர் கண்காட்சியை பள்ளி குழந்தைகள் பார்த்து பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
கோடை விழா மலர் கண்காட்சியில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை, கேம்பிரியம், ஜெரிபெரம் உள்பட பல்வேறு வகையான மலர்கள் இடம் பெறுகின்றன. இதுதவிர கொய்மலர்களை கொண்டு அண்ணா பூங்காவில் மான், புலி போன்றவற்றின் உருவங்களை தயார் செய்து அவையும் அங்கு வைக்கப்படுகின்றன. பூங்காவின் முன்பக்க கேட் சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அந்த கேட்டுக்கு வர்ணம் பூசும் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ளதால் ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அண்ணா பூங்காவுக்கு வந்தவர்கள் பூங்காவை சுற்றிப்பார்த்து இயற்கை அழகை ரசித்தனர். ஏராளமானவர்கள் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story