கணவருடன் சினிமாவிற்கு சென்றபோது தியேட்டரில் நகைகளை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் மாயம்


கணவருடன் சினிமாவிற்கு சென்றபோது தியேட்டரில் நகைகளை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் மாயம்
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சினிமாவிற்கு சென்றபோது தியேட்டரில் புதுப்பெண் தாலி, மெட்டி உள்ளிட்ட நகைகளை கழற்றி வைத்து விட்டு மாயமானார்.

தேன்கனிக்கோட்டை,

இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரத்தை சேர்ந்தவர் பெலிக் லூர்துசாமி. இவரது மனைவி செல்வி சகாயம் (வயது 26). பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 27.4.2019 அன்று திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கணவருடன், புதுப்பெண் செல்வி சகாயம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றார். படம் ஓடிக் கொண்டிருந்த போது தனக்கு தின்பண்டங்கள், கூல்டிரிங்ஸ் போன்றவை வாங்கி வருமாறு செல்வி சகாயம் கணவரிடம் கூறியுள்ளார்.

பெலிக் லூர்துசாமி தின்பண்டங்களை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த செல்வி சகாயத்தை காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெலிக்லூர்துசாமி, மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. செல்வி சகாயம் வைத்திருந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவரது தாலி, மெட்டி உள்ளிட்ட நகைகளை ஒரு பையில் வைத்து அதனை பெலிக்லூர்துசாமி அமர்ந்திருந்த இருக்கை அருகில் வைத்து விட்டு அவர் மாயமானது தெரிய வந்தது.

இது குறித்து பெலிக் லூர்துசாமி அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story