ஈரோடு, சத்தியமங்கலத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாணவிகள் கோரிக்கை


ஈரோடு, சத்தியமங்கலத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாணவிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு, சத்தியமங்கலத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என்று மாணவிகள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்கள்.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த 23–ந் தேதி நடந்தது. எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது கலெக்டர் சி.கதிரவனிடம் மாணவிகள் கூறியதாவது:–

நாங்கள் கடந்த 2017–2018 ஆம் ஆண்டு பிளஸ்–2 படித்து முடித்தோம். பிளஸ்–2 படித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுடன் படித்த மாணவ–மாணவிகள் பெரும்பாலானவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதுவே கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு மடிக்கணினிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதற்கு கலெக்டர் சி.கதிரவன் பதில் அளித்தபோது, விலையில்லா மடிக்கணினிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

எங்களது பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் குடிமகன்களின் தொல்லையை தாங்கி கொள்ள முடியவில்லை. ஆங்காங்கே குடித்துவிட்டு அலங்கோலமாக கிடக்கிறார்கள். இதனால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்லவே முடியவில்லை. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் மதுரைவீரன் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்களது பகுதியில் சீரான குடிநீர் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

பவானி பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தமிழ்செல்வி (வயது 25) தனது 3 குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில், ‘‘எனது கணவர் இறந்துவிட்டதால் எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால் எனது தாய் வீட்டில் இருந்து உறவினர்கள் சிலர் என்னை வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள். எனது தாய் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில் வீட்டின் ஒரு பங்கு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 145 மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜாமணி (வயது 65) என்பவர் கலெக்டர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது ராஜாமணி கதறி அழுது கொண்டே கூறியதாவது:–

நான் ஊதுபத்தி உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தேன். எனது மனைவி மீனாவுக்கு உடல்நிலை சரியில்லை. எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். ஒரேயொரு மகன் மட்டும் எங்களுடன் இருந்தாலும், செலவுக்கு பணம் எதுவும் தருவதில்லை. இதனால் அரசு மாதந்தோறும் தரும் ரூ.1,000 உதவித்தொகையை மட்டுமே வைத்து கொண்டு வாழ்ந்து வருகிறோம். சாப்பிட உணவு கிடைக்காமலும், அணிவதற்கு நல்ல துணிகள் இல்லாமலும் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜாமணி கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், அவருக்கு 2 வேட்டிகளையும் வழங்கி அனுப்பி வைத்தார்.


Next Story