மேலும் 3 புதிய படகுகள் வந்தன: அடுத்த மாதம் குருசடை தீவு பகுதிக்கு படகு போக்குவரத்து வனத்துறை உயர் அதிகாரி தகவல்


மேலும் 3 புதிய படகுகள் வந்தன: அடுத்த மாதம் குருசடை தீவு பகுதிக்கு படகு போக்குவரத்து வனத்துறை உயர் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

ரம்மியமான குருசடை தீவுக்கு மேலும் புதிய 3 படகுகள் வந்துள்ளன. இந்த நிலையில் படகு போக்குவரத்து தொடங்குவது எப்போது என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார்வளைகுடா கடல் பகுதியான பாம்பன் அருகே உள்ள சிங்கிலி தீவு முதல் தூத்துக்குடி வரையிலும் 21 தீவுப் பகுதிகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் கடல்பசு, டால்பின், கடல் ஆமைகள், பல்வேறு நட்சத்திர மீன்கள் மற்றும் அரிய வகை பவளப் பாறைகள் என 3,600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

தமிழகத்திலேயே கடலுக்குள் அதிக தீவுகளை கொண்ட கடல் பகுதி என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம் தான். இந்த நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே உள்ள குருசடை தீவு உள்ளிட்ட 4 தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் விரைவில் படகு போக்குவரத்து மாவட்ட வனத்துறை மூலம் தொடங்கப்பட உள்ளது. அதற்காக புதுச்சேரியில் இருந்து புதிதாக செய்யப்பட்ட 34 லட்சம் மதிப்பிலான 3 படகுகள் குருசடை தீவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இதில் 13 தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள தீவுகள் தூத்துக்குடி வனத்துறை கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. அதேபோல் பாம்பன் குந்துகால் அருகே குருசடை தீவு உள்ளது. இந்த தீவு பகுதிகளில் உள்ள அரிய கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகள் உள்ளிட்ட பல உயிரினங்களின் சிறப்பு குறித்தும், அந்த உயிரினங்களை பாதுகாப்பது குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாக வைத்து தான் குருசடைதீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. பொழுது போக்கிற்காக இந்த படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

தற்போது சூழல் சுற்றுலா திட்டப்பணிகள் ரூ.68 லட்சம் செலவில் குருசடைதீவு, சிங்கிலிதீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய 4 தீவுகளிலும் நடைபெற்று வருகின்றன. படகு போக்குவரத்திற்காக புதுச்சேரியில் இருந்து 2 பைபர் படகுகளும், ஒரு கண்ணாடி இழையினால் ஆன படகும் என 3 படகுகள் வாங்கி குருசடை தீவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும். படகு போக்குவரத்து தொடங்குவதற்கான தேதியோ மற்றும் கட்டணமோ இது வரையிலும் முடிவு செய்யப்படவில்லை.

குந்துகால் கடற்கரையில் இருந்து பைபர் படகில் குருசடை தீவுக்கு அழைத்து செலலப்படும் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து கண்ணாடி படகில் எற்றி குருசடைதீவு, சிங்கிலிதீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு ஆகிய 4 தீவுகளிலும் கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பார்க்க அழைத்து செல்லப்படுவார்கள்.

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் படகு போக்குவரத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குந்துகால் மற்றும் கருசடைதீவு பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக படகு நிறுத்தும் தளம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தீவு பகுதிக்கு படகு போக்குவரத்து தொடங்குவதால் மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்த ஒரே விழிப்புணர்வுக்காக தான் இந்த படகு போக்குவரத்தே தொடங்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களையும் சுற்றுலா பணிகள் கடலில் வீச வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story