விளாத்திகுளம் அருகே உப்பளம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே புதிதாக உப்பளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
விளாத்திகுளம் பெரியசாமிபுரம் இளைஞர் இயக்கம் சார்பில் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்கள் ஊரை சுற்றி உப்பளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் நீர்ஆதாரம் பாதிப்படைந்து வருகிறது. எங்கள் ஊருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் குறைந்த அளவு வழங்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீராக இருந்த நீர்நிலைகளின் அருகே உப்பளங்கள் அமைந்து இருப்பதால், தண்ணீர் உப்பாக மாறி விட்டது.
தற்போது நீர்மட்டம் மிகவும் குறைந்து வறண்டு விட்டது. உப்பளத்துக்காக தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சுவதால் கடல்நீர் உட்புகும் நிலை உருவாகி உள்ளது. தற்போது புதிதாக ஒரு தனியார் நிறுவனம் உப்பளம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த உப்பளம் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்படுகிறது. ஆகையால் அதனை தடுத்து எங்கள் ஊரின் நீர்ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் பங்குதந்தை மைக்கிள் ஜெகதீஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சொக்கன்குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 1,500 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊரில் உள்ள அதிசய மணல் மாதா கோவிலுக்கு தருவை வழியாக செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்த தார் சாலையை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முள்ளுப்பட்டி என்ற முத்துராமலிங்கபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி 41-வது வார்டு அ.ம.மு.க. செயலாளர் காசிலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அமைக்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கோவில் கட்டி உள்ளார். அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் கொடுத்த மனுவில், அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தரமற்ற தண்ணீர் கேன் விற்பனை செய்வதை சோதனைகள் நடத்தி தடுக்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்தி கேன் தண்ணீர் உற்பத்தி செய்யும் போலி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள மேலசெக்காரக்குடியை சேர்ந்த காமராஜா கலெக்டரிடம் கொடுத்த மனுவில், செக்காரக்குடி பகுதியில் கடந்த 2017-18-ம் ஆண்டு உளுந்து, பாசி பயிரிட்டு இருந்தோம். அப்போது ஏற்பட்ட கடுமையான வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயிர்களுக்கு காப்பீடு பிரிமியம் செலுத்தி உள்ளோம். ஆகையால் காப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும். படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு அரசு இழப்பீடு தொகை அறிவித்தது. அந்த தொகையையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் திருட்டு நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது. ஆகையால் நிலத்தடி நீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story