புதுச்சேரி – திண்டிவனம் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் கார் மோதல்; 2 பேர் பலி சிறுமி உள்பட 5 பேர் படுகாயம்


புதுச்சேரி – திண்டிவனம் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் கார் மோதல்; 2 பேர் பலி சிறுமி உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 May 2019 5:00 AM IST (Updated: 28 May 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி – திண்டிவனம் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் கார் மோதியது. இந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பலியாகினர். சிறுமி உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

வானூர்,

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 57). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையின் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு நேற்று காலை பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

புதுச்சேரி – திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் புளிச்சப்பள்ளம் என்ற இடத்தில் பகல் 11 மணியளவில் கார் சென்றது. அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் வந்தனர்.

பஞ்சவடி கோவிலுக்கு செல்வதற்காக நான்கு வழிச்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் கார் திரும்பியது. அதன் மீது மோதாமல் இருக்க பெங்களூரு நோக்கி சென்ற காரை ஓட்டிச்சென்றவர் திடீர் என பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த கார் மீது லேசாக மோதிவிட்டு, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த வெங்கடேசன், சஞ்சீவ்குமார் (25) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த காரில் பயணம் செய்த ஹேமலதா, அபிஷேக், குணசீலாதேவி மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த வெங்கடேசன், சஞ்சீவ்குமாரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் சென்னையில் இருந்து காரில் வந்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக புதுச்சேரி– திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story