பாளையங்கோட்டை அருகே வெடி பொருட்களுடன் 4 பேர் கைது


பாளையங்கோட்டை அருகே வெடி பொருட்களுடன் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அருகே வெடி பொருட்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெள்ளிமலை பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள குப்பனாபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் செல்வம் (வயது 29), முருகன் மகன் வரதராஜன் (35), தங்கராஜ் மகன் பாலமுருகன் (32), ஈஸ்வரன் மகன் விஜயன் (39) என்பது தெரியவந்தது. அவர்கள் கையில் வைத்து இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி பொருட்களை வைத்து இருந்ததாக போலீசாரிடம் கூறினர்.

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story