குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல், அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படுகிற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. எனினும் மக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் விதிகளை விலக்கி கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம் போல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அங்கிருந்த பிரதான கூட்டரங்கில் நடந்தது.

இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். மொத்தம் 112 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சரின் முகாம் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அதிகாரிகளின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

குடிநீர் கேட்டு மனு

இதற்கிடையே வெள்ளியணை அருகேயுள்ள சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலக்ததில் மனு கொடுத்தனர். அதில், எங்களது பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர்தொட்டியில் மோட்டார் பழுதினால் தண்ணீர் எடுக்க முடிவதில்லை. இதன் காரணமாக விவசாய கிணறுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு குடிநீரை தேடி அலைய வேண்டியுள்ளது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கக வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதே போல் கடவூர் தாலுகா இடையப்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாததன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறோம். எனவே தடையின்றி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story